
காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
இன்று என்னுடைய சிறுவயது விளையாட்டு தோழன், எனக்கு தனிமையின் பயம் தோன்றும்போதெல்லாம் எனக்கு தைரியமூட்டிய ஒரு தேவதன் (தேவதையின் ஆண்பால் இதுதானே?) திரு வாண்டுமாமா அவர்களின் பிறந்த நாள். இந்த விஷயம் மிகவும் தாமதமாக தெரிந்த காரணத்தினால் ஒரு சிறிய பதிவினை இப்போது இங்கே வழங்கப்ப்போகிறேன் (ஹுக்கும், முன்கூட்டியே தெரிந்தால் மட்டும் பல பதிவுகள் இட்டுவிடுவீரோ? என்று நீங்கள் முனகுவது எனக்கும் கேட்கிறது). மன்னிக்கவும்.
வாண்டுமாமா அவர்களை பற்றி சொல்ல நான் யார்? அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கு பல்லாயிரக்கணக்கான (தொலைந்து போன) சிறார்களில் நானும் ஒருவன். என்னுடைய சிறு வயது நினைவுகள் ஒரு கலைந்த கனவாக மாத்திரமே காட்சியளிக்கும் இந்த ஒரு அசாதாரண வாழ்வில், இப்போதும் அப்போதும் என்று பல பஞ்சுமிட்டாய் தருணங்களை அளித்தவர்தான் வாண்டுமாமா. இன்றைக்கும் பலே பாலுதான் எனக்கு பிடித்த கதை, (எனக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு சாரு என்றுதான் பெயரிடுவேன்), வீர விஜயன் தான் என்னுடைய சிறு வயது நாயகன். இந்த அருமையான தருணங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா.
இன்றைய இணையதள பிளாக்கர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்று இனம்காட்டிக்கொள்ள திடீரென்று ஏழெட்டு நாவல்களை எழுதுவது, தன்னுடைய எதிரியை திட்டுவதற்கென்றே தன்னுடைய இணையதள பக்கங்களை உபயோகப்படுத்துவது என்று தங்களின் மற்றும் அவர்களின் எழுத்துக்களை படிக்கும் அப்பாவி மக்களின் நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்கும் வேளையில் ஒரு சிறுகதை என்றால் என்ன, அது எப்படி பின் நவீனத்துவ சிறுகதையாக மாறுகிறது என்பதற்கு இந்த ஆறுபக்க கதையே சிறந்த உதாரணம். முடிந்தால் இதுபோல எழுதப் பாருங்கள்.
ஒரு நாயகனை எதிர்நாயகனாக காட்டுவதும், எதிர் நாயகன் ஒருவனை நாயகனாக காட்டுவதும் ஒரு திறந்த கதை சொல்லிக்கு மட்டுமே சாத்தியம். அடுத்து வரும் கதையை கூர்ந்து படிக்கவும். படித்து முடித்தவுடன் இரண்டாவது முறை படியுங்கள். அப்படி இரண்டாவது முறை படிக்கும்போது கடைசி ஐந்து பத்திகளை களைந்துவிட்டு படியுங்கள் - கதையின் போக்கே வித்தியாசமாகவும், நாயகன் எதிர்நாயகனாகவும், எதிர் நாயகன் நாயகனாகவும் தெரியும். இந்த யுத்தி ஒரு தேர்ந்த கதை சொல்லிக்கு மாத்திரமே வாய்க்கும். நிதானமாக படிக்க ஆரம்பியுங்கள்.
மிக மிக விரைவில் திரும்ப மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்- முழு பதிவுடன் வருகிறேன்.
பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.